Tuesday, 3 October 2017

போராட்டம்

                              போராட்டம் 
இதற்கிடையில் வீட்டின் வறுமையைப் போக்க வையவனின் தாய் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு உதவ முற்பட்டார். பரமசிவம் சொந்த ஊருக்குப் போனாலும் தன் மக்கள் (வையவனுக்குப் பிறகு பிறந்த ஒரு தம்பி.. மற்றும் வையவன்) படிப்பிற்காகத் தாம் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது வெள்ளக்குட்டையில் உயர்நிலைப்பள்ளி இல்லாததும் நன்கு வாழ்ந்தபின் தோல்வியுற்று ஊர் திரும்பக்கூடாது என்ற வைராக்கியமும் வையவனின் தாய் வெள்ளக்குட்டைக்குப் போகக்கூடாத  காரணங்களாயின்.
ஹாஸ்டலில் வையவன் 7 முதல் 11ம் வகுப்பு வரை படித்தார். கதைகள் வாசிப்பதிலும் பத்திரிகைகள் படிப்பதிலும் இளமை முதல் அவருக்கு ஏற்பட்டிருந்த ஆர்வம் ஹாஸ்டலிலும் தொடர்ந்தது.  தமிழ் ஒளி என்று ஒரு கவிஞர் இருப்பதையே அறியாத 13ம் வயதில் தமிழ் ஒளி என்று பெயரிட்டு ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி அதில் தமது கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி சக ஹாஸ்டல் நண்பர்களிடம் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வார்.
ஹாஸ்டல் வாழ்க்கையில் பெரிய கட்டுபாடுகள் இல்லாமையும் இலக்கியங்களின் மீது ஈர்ப்பு இருந்ததும் வையவனை படிப்பின்மீது அதிக அக்கறை காட்டவில்லை. ஹாஸ்டலுக்கு அருகாமையில் உள்ள ஒரு நூலகத்திலும் பள்ளி நூலகங்களிலும் நூல்கள் வாசிப்பதும் பத்திரிகைகள் வாசிப்பதுமாக அவரதுபொழுது கழிந்தது. அவர்படித்த நடுநிலைப்பள்ளியில் நூலகத்தில் புத்தகங்கள் அதிகமில்லை. எனவே அவரே அதிகப் புத்தகங்கள் உள்ள நூலகம் கொண்ட பள்ளியான தங்கசாலைத் தெருவில் தொண்டை மண்டலதுளுவ வேளாளர் உயர்நிலைப்பள்ளி தான் என்று கண்டறிந்து தம் உயர்நிலைப்படிப்பை மாற்றிக்கொண்டார். அங்கே படிக்கும் போது தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் பள்ளிக்கு வந்து பேசிய பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
வையவன் தம் பள்ளி இறுதித் தேர்வை முடிக்கும் போது (எஸ்.எஸ்.எல்.சி) அவரது குடும்பம் தாய் அமிர்த சிகாமணி அம்மாளின் பிறந்த ஊரான திருப்பத்தூருக்குப் பெயர்ந்துவிட்டது. பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் அவர் அங்கே சென்றார். அவரது தந்தை ஒரு சிறு பெட்டிக்கடை நடத்தத் தொடங்கியிருந்தார். அருகிலேயே செல்வாக்கும் பதவியுமுள்ள வசதியான உறவினர்கள் பெரிய வெல்ல மண்டிகள் நடத்தி வந்தனர். அவர்களைப் போல் வையவனை வியாபாரத்தில் ஈடுபடுத்தி வியாபாரியாக்கக் கருதினார் தந்தை பரமசிவம்.
வையவனின் முதலில் ஒரு பல்பொருள் விற்பனைக் கடையில் குமாஸ்தாவாக வேலைக்கு அமர்த்தினார். அந்த கடை முதலாளி வையவனை அடேய் என்று கூப்பிட்டுத் தரக் குறைவாக நடத்தினார் என்பதால் ஒரே வாரத்தில் வையவன் கடையை விட்டுத் தானே விலகிவிட்டார். அடுத்து முனிசிபல் தலைவர் தேர்தலுக்கு நின்ற பிரபல துணிக்கடைக்காரர்  ஒருவரின் உறவினருக்கான வாக்காளர் பட்டியலை எழுதும் வேலையில் ஒரு மாதம் சென்றது. அதற்குப் பின் துணிக்கடை  ஒரு வெல்ல மண்டி என்று சில சில வேலைகள் செய்ய முயன்ற வையவன் எதிலும் பிடிப்பின்றித் திருப்பத்தூரின் பெரிய அரசு நூலகத்தில் பல்வேறு வகை நூல்களை வாசிப்பதிலேயே ஈடுபட்டார்.
இதற்கிடையில் சென்னை வாசத்தின் போது தொண்டை மண்டல துளுவ வேளாளர்  உயர்லைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சி.பத்மநாபன் என்பவர் மாவட்டக் கல்வி அதிகாரியானதால் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு மாவட்டக்கல்வி அதிகாரி நினைத்தால் தம் சொந்த செல்வாக்கின் அடிப்படையில் ஒருவரை  ஆசிரியர் பயிற்சியில் மாணவராக சேர்க்கலாம். வையவன் மீது பரிவும் அன்பும்  கொண்ட அவர் வையவன் எஸ்.எஸ்.எல்.சி முடிக்காததால் ஜூனியர் கிரேட் என்ற [ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கிற] இளநிலை ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பம் போடலாம் என்று கூறினார். அவ்வாறே அவர் விண்ணப்பித்ததற்கு சென்னை அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடமும் கிடைத்தது. ஆனால் தங்கிப்படிக்கவும் சாப்பாட்டுச் செலவிற்கும் தன்னால் பணம் அனுப்ப முடியாது என்று தந்தை பரமசிவம் அறிவித்துவிடவே கிடைத்த வாய்ப்பைப் பயன்ன்படுத்திக் கொள்ள இயலவில்லை.

 வேலையோ சரியான வழிகாட்டலோ இல்லாமல் ஊர் திரிகிற பருவத்தில் தற்செயலாக அறிமுகம் பெற்ற  இளமைப் பருவ நண்பர் வா.சீ. வேங்கடாசலத்தின் தொடர்பால் திராவிட முன்னேற்றக்  
கழகத்தின் மீது தனக்கிருந்த பற்றையும், அண்ணாதுரை மீது இருந்த அன்பையும் விட்டு விலகி தேசீயவாதியானார். அவர்  மூலமாக அன்றைய பிளவுபடாத இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் கிளைச் செயலாளர் கே. கிருஷ்ணசாமி என்பவர் அறிமுகமானார் . அவர் மூலம் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு திருப்பத்தூர் கோடியூர் ஜோலார்ப்பேட்டை ஆகிய சுற்றுப்புறங்களில் பீடித்தொழிற்சங்கங்கள் அமைப்பதிலும் துப்புரவுத் தொழிலாளர் சங்கம் அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். தொழிலாளர் பழக்கமும்நெருக்கமும் வாழ்க்கை என்னவென்று அவருக்கு உணர்த்தின. சோவியத் தநாடு ஜனசக்தி ஆகிய பத்திரிக்கைகளோடு நவசக்தி என்ற தேசிய நாளேட்டின் விநியோஸ்தராகவும அன்றாடம் ரயில் நிலையம் சென்று நாளேடுகளை அங்கிருந்து எடுத்து வந்து சைக்கிளில் வீடுவீடாகப போய் அவற்றை விநியோகிக்கும் வேலை தொடங்கிற்று. இதற்கிடையில் ஒரு வாடகை நூலகத்தில் சிறிது காலம் பணியாளாகப் பெற்ற அனுபவத்தைக்கொ ண்டும்  தனது நண்பர் தி.மு.லோகேசன்  என்பவர் நடத்திய வாடகை நூலகம் மூலம் பயிற்சியைக்  கொண்டும் புதுமைப்பண்ணை என்ற பெயரில் தாமே ஒரு வாடகை நூலகம் தொடங்கினார். இப்படிப்  பல்வேறு அனுபவங்களும் வாசிப்பும் அவரது எழுத்து முயற்சிகளைத் தொடர வைத்தன.[தொடரும்]